
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்பகுதிகளில் இந்திய மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத இழுவைப்படகுகள் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்பகுதிகளில் இந்திய மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவதனால் தமது வாழ்வாதார தொழில்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு தொடக்கம் நல்ல தண்ணீர்தொடுவாய் வரையான சுமார் 73 கிலோமீற்றர் நீளமான கரையோரப்பகுதிகளை உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ள கடற்பகுதிகளில் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தொழிலாக கடற்தொழில்களை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில் இவர்களது வாழ்வாதாரத்தொழில்களை பாதிக்கும் வகையில்; காலத்திற்கு காலம் பல்வேறு சட்டவிரோத தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் இவர்களது வாழ்வாதாரத்தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இதனால் தங்கள் வாழ்வில் எந்த விமோசனமும் இல்லையெனத் தெரிவித்துள்ளனர்.
இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளும் வெளி மாவட்ட மீனவர்களின் இழுவைப்படகுகளும்; சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் தமது தொழில் நடவடிக்கைகள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள இப்பகுதி கடற்தொழிலாளர்கள் ஏற்கனவே அட்டைத்தொழில், வெளிச்சம் பாச்சி மீன்பிடித்தல், சங்கு குளித்தல், போன்ற தொழில்களால் தமது தொழில்கள் பாதிக்கப்பட்டு வருகின்றபோதும் பருவகாலத்திலே செய்யும் இறால் உள்ளிட்ட தொழிலைக் கூட செய்ய முடியாத நிலமைகாணப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.எதிர்காலத்தில் கடற்தொழிலை விட்டு வேறு தொழிலை மேற்கொண்டே தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த வேண்டியுள்ளது என்றும் ஏராளமான கடற்தொழில் செய்யக்கூடிய இளைஞர்கள் வேறு கூலி வேலைகளுக்கு செல்லும் நிலமை காணப்படுகின்றது.எனவே இவ்வாறான சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தி தமது தொழிலை செய்யக் கூடிய நல்ல ஒரு சூழலை ஏற்படுத்தித்தருமாறு உரிய அதிகாரிகளை பல தடவைகள் கோரியும் இதுவரை எந்தவித தீர்வுகளும் கிடைக்கவில்லை எனவும் சட்டவிரோத தொழில்களை தடுத்து நிறுத்தி தமது தொழில்களை மேற்கொள்ளக் கூடிய ஏதுவான சூழலை ஏற்படுத்தித்தருமாறு இப்பகுதி கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.