வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இராணுவ வீரர் கைது
போடி வ.உ.சி நகர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகன் முருகன் (36). இவர் இந்திய ராணுவத்தில் மேற்கு வங்க இராணுவ படைப் பிரிவில் அவில்தாராக உள்ளார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊரான போடிக்கு வந்திருந்தார்.
கடந்த வருடம் (2021) பிப்ரவரி மாதம் போடி சர்ச் தெருவில் வசித்துவரும் சாலைப்பணியாளர் மணிவண்ணனின் மகன் தீனதயாளன்(26). இவர் முருகன் மனைவி சரவண பிரியாவை (26) கேலி கிண்டல் செய்துள்ளார். இது குறித்து சரவணப்பிரியா தனது கணவருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தை அடுத்து முருகன் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போடி நகர் போலீசார் உடனடியாக தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதனால் இரு குடும்பத்திற்க்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முருகனின் தாயார் முத்துலெட்சுமி மற்றும் அவரது மனைவி சரவணப்பிரியா தனியாக வந்துள்ளனர். அப்போது மணிவண்ணன் மற்றும் அவரது மனைவி ஞான ஒளி வழிமறித்து முத்துலெட்சுமியின் சேலையை பிடித்து இழுத்து அரிவாளை காட்டி மிரட்டி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதை அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த முருகன் தன் கையில் இருக்கும் துப்பாக்கியை கொண்டு வானை நோக்கி சுட்டு மணிவண்ணன் குடும்பத்தை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மணிவண்ணன் போலீசில் புகார் செய்ததை அடுத்து முருகனிடம் விசாரணை நடத்தினர். மேலும் முருகன் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மணிவண்ணன் மற்றும் ஞான ஓளி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இராணுவத்தில் பணிபுரியும் முருகன் சனிக்கிழமை விடுமுறை முடிந்து லடாக் செல்ல இருந்தது குறிப்பிடத்தக்கது.