ஹிஜாப் விவகாரம் : கண்டன இயக்கம் நடத்த சிபிஎம் தலைவர் கே.பாலகிருஷ்ணன் அறைகூவல்
ஹிஜாப் உடை விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை பறிப்பை கண்டித்து வலுவான கண்டன இயக்கம் நடத்திட கட்சி அணிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநிலத்தில் சில கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் `ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிராக, பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் வெறியூட்டும் பேச்சுகளையும், வன்முறையையும் ஏவி விட்டு கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மிக நீண்டகாலமாக `ஹிஜாப்’ அணிந்து கல்வி நிலையங்களுக்கு வருவது நடைமுறையில் உள்ளது. அவரவர் விரும்புகிற மதத்தை பின்பற்றுவது அரசியல் சாசனம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும்.
இதற்கு மாறாக கர் வாப்சி, லவ் ஜிஹாத், மாட்டுக்கறி தடை, பொது இடங்களில் வழிபாட்டுத் தடை போன்றவை உள்ளிட்ட இஸ்லாமிய சமூகத்துக்கு எதிரான பாஜகவின் நடவடிக்கைகளின் நீட்சியாகவே, காவியை முன்னிறுத்தும் `ஹிஜாப்’ எதிர்ப்பையும் பார்க்க வேண்டியுள்ளது. சமத்துவம், சீருடை உள்ளிட்ட விஷயங்களுக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மதவெறி அரசியல் மற்றும் சித்தாந்தத்தின் நீட்சியே இது என்பது தெளிவு.
கர்நாடக மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக திட்டமிட்டு மதவெறி அரசியலை உசுப்பிவிட்டு மக்கள் மத்தியில் மத மோதலை தீவிரப்படுத்தி வருகிறது. கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் நிறைவேற்றியது, அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோயில்கள் அனைத்தையும் இந்து அமைப்புகளிடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது இந்நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும். பாஜக அரசின் மதவெறி அரசியலின் பகுதியாகவே ஹிஜாப் தடை என்கிற பெயரில் தற்போது மாணவர்களிடத்தில் மதவெறியை கிளறிவிட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடகத் தேர்தல்களில் தோல்வி முகத்தை தழுவியுள்ள பாஜக மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி தனது ஆதரவு தளத்தை விரிவுபடுத்த எத்தனித்துள்ளது.