மு.க.ஸ்டாலினை பதாகையுடன் சந்தித்த ஆந்திர மாணவர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகம் செல்லும் வழியில், டி.டி.கே.சாலையில், அவரை சந்தித்த ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் என்.சதிஷ், ‘‘எங்களுக்கு உதவுங்கள்’’ என்ற பதாகையுடன் காத்திருந்தார்.
அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்ததும் அந்த மாணவர் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு நன்றி தெரிவித்து, தனது ஆதரவை தெரிவித்தார். மேலும், தான் ஆந்திர மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும், நீட் தேர்வு காரணமாக மருத்துவப் பட்டப்படிப்பு படிக்க இயலாமல் போய்விட்டது, ஆகையால் உங்கள் பேராதரவு ஆந்திர மாநிலத்திற்காகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதை கேட்டதும் முதல் அமைச்சர் அந்த மாணவனிடம் நீட் தேர்வு ரத்து தொடர்பாக சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக அகில இந்திய அளவில் தான் குரல் கொடுத்து வருவதாக தெரிவித்தார்.
எனவே நம்பிக்கையோடு ஊருக்கு செல்லுமாறு அந்த மாணவரை கேட்டுக் கொண்டார். அவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டார்.