தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. கொரோனா அதிகரித்ததால், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறுகின்றன.
தற்போது பாதிப்பு ஓரளவு குறைந்துள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. அப்போது, பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. அதனை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. வரும் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், விடுதிகளில் 50 சதவித வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும். தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.