வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைத்த பெண்கள்
சிவகங்கை அருகே பொங்கல் விழாவில் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைத்தனர்.
சிவகங்கை அருகே மதகுபட்டி கீழத்தெரு, மேற்குத்தெரு, சலுகைபுரம் பகுதிகளில் அதிகளவில் ஒரு சமூகத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் தனித்தனியாக காவல் தெய்வங்களாக பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனை தரிசித்து வருகின்றனர். நேற்று மாட்டு பொங்கலையொட்டி, தனித்தனியாக பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு தவிர்த்து வெள்ளை சேலை உடுத்தி அம்மனுக்கு பொங்கல் வைத்தனர்.
அம்மனுக்கு நேர்த்திக்கடனாக கரும்புத் தொட்டில் கட்டினர். தொடர்ந்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இளைஞர்கள் காளைகளை அடக்கினர். விழா முடிந்ததும் மாலையில் மேலத்தெரு, கீழத்தெருவில் நேர்த்திக்கடன் கரும்புகள், விரதமிருந்து அம்மன் காலடியில் வைத்த எலுமிச்சை ஆகியவற்றை ஏலம் விட்டனர். இந்த ஏலத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பங்கேற்றனர்.
கரும்பு, எலுமிச்சையை ஏலம் எடுத்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதனால் அவற்றை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். மேலத்தெருவில் ஒரு கரும்பு அதிகபட்சமாக ரூ.17,301-க்கும், கீழத்தெருவில் ஒரு எலுமிச்சை ரூ.40,001-க்கும் ஏலம் விடப்பட்டது.