
வாக்குறுதிகளை எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிறைவேற்றுவேன் - ஜனாதிபதி கோட்டாபய
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வு நேற்று (15) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் குருணாகல் - யக்கபிட்டியவில் நடைபெற்றது.
சமய அனுஷ்டானங்களுடன் நிகழ்வு ஆரம்பமானது. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி 41 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இது ஐந்து இடைமாறல் பகுதிகளைக் கொண்டது. மீரிகம, நாக்கலாகமுவ. தம்பொக்க, குருணாகல், யக்கபிட்டிய ஆகிய இடங்களில் இடைமாறல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு ஒழுங்கைகளைக் கொண்டதாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்து 5 வருட காலப்பகுதிக்குள் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்த சகல விடயங்களையும் எதிர்வரும் 3 வருட காலப்பகுதிக்குள் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இந்நிகழ்வின் போது உறுதியளித்தார். இதற்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பும் தேவை. மக்களுக்காக சேவையாற்றுவதற்கே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.