
பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை
பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை அந்த பொருளாதார தடை தற்போதுதான் சிங்களவர்கள் உணர்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வும் பாரம்பரிய தமிழர் விளையாட்டு நிகழ்வும் உருத்திரபுரம் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது குறித்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், தமிழர்களின் பாரம்பரியத்தினையும் பண்பாட்டினையும் நாங்கள் தான் பேணிவளர்க்க வேண்டும், நாங்கள் தான் அவற்றை கட்டிக்காக்க வேண்டும், நாங்கள் அதற்கான முதுகெலும்பாக செயற்பட வேண்டும் என்கின்ற அடிப்படையில் தான் இன்றைய நாள் ஒரு பண்பாட்டு நாளாக உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் முன்னெடுத்திருக்கிறது.
நாம் கடும் நெருக்கடியோடு வாழ்ந்தவர்கள். ஒரு கால கட்டத்தில் 90 களில் இலங்கையில் மண்ணெண்ணெய் 12 ரூபாய்க்கு விற்ற போது நாம் 300 ரூபாய்க்கு வாங்கியவர்கள் அப்போது யூரியாவை கண்ணால் காணவில்லை உடுப்பு துவைப்பதற்கு சவர்க்காரங்களைக் காணவில்லை நாங்கள் இந்த மண்ணிலே பெட்ரோலை கண்டிருந்ததில்லை சீமெந்துகளை கம்பிகளை கண்டிருந்ததில்லை அவ்வாறு இருந்தும் இந்த மண்ணிலே நாங்கள் வாழ்ந்து இருந்தோம் எங்களுடைய வாழ்க்கை நகர்ந்திருந்தது.
அதனை இப்போது தான் சிங்கள மக்கள் படிக்கவும் உணரவும் ஆரம்பித்திருக்கிறார்கள் ஆகவே பொருளாதார தடை என்பதும் பொருளாதாரத்தின் மீதான ஒரு வகையான ஆக்கிரமிப்பு என்பதும் இப்போதுதான் சிங்கள மக்களை உணர வைத்திருக்கிறது . தமிழர்கள் ஏற்கனவே இவற்றை நேரடியாக அனுபவித்து வாழ்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.