மத்திய மந்திரி இன்று 5 மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை முழுமையாக ஓய்வதற்குள், மீண்டும் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்குள் வந்த தினசரி தொற்று எண்ணிக்கை, கடந்த மாதம் இறுதியில் இருந்து வேகமெடுக்க தொடங்கியது. நேற்று காலை 8 மணி வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் சுமார் 1.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது கடந்த 224 நாளில் அதிகபட்சம் ஆகும்.
இவ்வாறு நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் ெதாற்று வேகமெடுத்து இருக்கும் நிலையில், இவற்றை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று மாலையில் மத்திய மந்திரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
காணொலி முறையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா, சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் விமான போக்குவரத்து செயலாளர், உள்துறை செயலாளர், கேபினட் செயலாளர் மற்றும் ரெயில்வே வாரிய தலைவர் உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நிலவரம் குறித்து ஆய்வு செய்ததுடன், தொற்று பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நாடு முழுவதும் சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள் விவரம், சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள், மருந்து இருப்புகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
அந்தவகையில் கடந்த ஒரு வாரத்தில் நாட்டின் 31 சதவீத சிறுவர்-சிறுமிகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட தரவுகளை பிரதமரிடம் அதிகாரிகள் சமர்ப்பித்தனர்.
பின்னர் இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மாவட்ட அளவிலேயே போதிய சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்யுமாறும், சிறுவர்-சிறுமிகள் மற்றும் அனைத்து பயனாளிகளுக்கான தடுப்பூசி திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.