
காணிகளினை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் அபிவிருத்திக்காக அடையாளப்படுத்தப்பட்ட காணிகளினை விடுவிப்பது தொடர்பில் வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் காணிகளில் மாவட்ட அபிவிருத்தியினை நோக்காக கொண்டு பரிந்துரைக்கப்பட்ட காணிகளினை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்றது.குறிப்பாக கடந்த காலங்களில் பொது மக்களினால் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட போதிலும் யுத்தம் காரணமாக விவசாயம் மேற்கொள்ளப்படாத நிலையில் காடுகளாக மாறியுள்ள அடையாளப்படுத்தப்பட்ட காணிகள் - கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரைக்கான காணிகள் - அபிவிருத்தி பணிகளுக்காக கோரப்பட்ட காணிகள் மற்றும் இளம் முயற்சியாளர்களுக்கான ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் செயற்திட்டத்திற்காக அடையாளப்படுத்தப்பட்ட காணிகள் போன்றவற்றை விடுவிப்பது தொடர்பிலேயே மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.ந.திருலிங்நாதன், வனப்பாதுகாவலர், வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர், வனபாதுகாப்பு, வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட துறைசார் அதிகாரிகள் ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.தொடர்ந்து குறித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.