தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து 2020-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதும், படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது. கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மட்டும் வருகிற 10-ந்தேதி வரை அமலில் இருந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்தது.
இதனால் வேறு வழியில்லாமல் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி, கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் மற்றும் அவசியம் ஏற்படின் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
உலகளவில் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்தியாவில், மராட்டியம், மேற்கு வங்காளம், டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து மேற்கு வங்காளம், டெல்லி, கேரளா, கர்நாடக மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.