நோயில் இருந்து விடுபட்ட மாநிலம் என்ற பெயரை எடுக்கவேண்டும் – ஸ்டாலின்
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது, ஒமைக்ரான் தற்போது மிரட்ட தொடங்கியிருக்கிறது. கொரோனாவில் இருந்து மீண்டு வந்த நமக்கு ஒமைக்ரானால் தடை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒமைக்ரானில் இருந்து பாதுகாத்துக்கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டும். முந்தை வைரஸை விட ஒமைக்ரான் நோய் தாக்கம் குறைவு தான்.
ஒமைக்ரான் நோய் தாக்கம் குறைவாக இருந்தாலும் பரவல் வேகம் அதிகம். முகக்கவசம் மட்டுமே நமக்கு கேடயம், அதனால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அனைவரும் பாதுகாப்புடன் இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. தடுப்பூசிகள், நோய் எதிர்ப்பை தொடர்ந்து அளித்து வருகிறது.
தடுப்பூசி செலுத்தி கொண்டால் இறப்பு விகிதம் குறைவு. தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என அன்போடு, பணிவோடு, கெஞ்சி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்,
புதிய வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்துவோம் என உறுதி ஏற்போம். நோயில் இருந்து விடுபட்ட மாநிலம் என்ற பெயரை எடுக்கவேண்டும்; அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.