இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து காணப்பட்டன. கடந்த 29ந்தேதி 9,195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. நாட்டில் நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை திடீரென 13,154 ஆக உயர்ந்தது. நேற்று 16,764 ஆக பதிவாகி இருந்தது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மீண்டும் தொற்று உயர்ந்து உள்ளது. இதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 22,775 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சம் கடந்து உள்ளது. இதன்படி 1,04,781 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று 91,361 ஆகவும், நேற்று முன்தினம் 82,402 ஆகவும் இருந்தது. 8,949 பேர் (நேற்று 7,585) குணமடைந்து சென்றுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.32% ஆக உள்ளது.
இதேபோன்று உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. கொரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 406 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று 220 பேர், நேற்று முன்தினம் 268 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 4,81,080ல் இருந்து 4,81,486 ஆக உயர்ந்து உள்ளது.
கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த சூழலில், நேற்று முன்தினம் 10 ஆயிரம் எண்ணிக்கையை கடந்து பாதிப்புகள் பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது. நேற்று 15 ஆயிரம் கடந்து இருந்தது. இந்நிலையில், பாதிப்பு எண்ணிக்கை இன்று 20 ஆயிரம் கடந்து உள்ளது.