
சிறையிலுள்ள இந்தியக் கடற்றொழிலர்களை சந்தித்தார் டக்ளஸ்
இழுவைமடித் வலைத் தொழிலில் ஈடுபடுவதனால் கடல் வளங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களையும், இலங்கை கடற்றொழிலாளர் எதிர்கொள்ளுகின்ற வாழ்வாதார அச்சுறுத்தல்களையும் தமிழக உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களை புத்தாண்டு தினமான இன்று சந்தித்து அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வைத்து கலந்துரையாடிய போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த சந்திப்பின் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், இலங்கையின் கடல் வளத்தினையும் எமது மக்களின் வாழ்வாதாரத்தினையும் அழிக்கின்ற இழுவை வலைத் தொழில் உடனடியாக நிறத்தப்பட வேண்டும் என்பதே எமது மக்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.
இதனை இந்தியக் கடற்றொழிலாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். கடல் வளங்கள் அழிக்கப்படுவதனால் இந்தியக் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்படுகின்றது.
ஆனால், இந்தியாவில் உண்மைகள் மறைக்கப்பட்டு தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இழுவைமடித் தொழிலில் ஈடுபடுகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களும் தமது வாழ்வாதாரத்திற்காகவே தொழிலில் ஈடுபடுகின்றார்கள் என்பதை நான் அறிவேன்,என்றும் கூறினார்.