ஒமைக்ரானால் இந்தியா எதிர்கொள்ளப்போகும் மருத்துவ சவால் என்ன?
ஒமைக்ரான் பரவல் இந்தியாவில் வேகமெடுத்துள்ள சூழலில், தொற்று உச்சம் தொடும் போது இந்தியா எதிர்கொள்ளப் போகும் மருத்துவ சவால் என்னவென்று கூறியிருக்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்.
இது தொடர்பாக அவர் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில்,
ஒமைக்ரான் அலையில் இந்தியா சந்திக்கவுள்ள மிகப்பெரிய சவால், மருத்துவப் பராமரிப்புக்கான தேவை அதிகரிப்பதே. ஒமைக்ரான் இந்தியாவில் அதிகவேகமாகப் பரவப் போகிறது. அப்போது மருத்துவத் துறைக்கு அழுத்தம் மருத்துவமனைகளின் உள் சிகிச்சைப் பிரிவிலிருந்து இருந்து புற நோயாளிகள் பிரிவுக்கு மாறும். ஐசியுக்களில் இருந்து அழுத்தம் மாறி வீடுகளிலேயே மருத்துவ சேவையும் ஆலோசனையும் தேவைப்படுவோர் ஏராளமானோர் காத்திருக்கும் சூழல் உருவாகும். மக்களுக்கு அறிகுறி இல்லாமல் இருக்கலாம். ஆனால், மருத்துவ ஆலோசனைக்காக அவர்கள் மருத்துவப் பணியாளர்களை சந்திக்க அதிக ஆர்வம் காட்டுவர். இந்த மாதிரியான தேவைகளை எதிர்கொள்ளவே நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
டெலிமெடிசினுக்கு முக்கியத்துவம்: இத்தகைய சூழலில் டெலி கன்சல்டன்ட் சேவைகளை அதிகப்படுத்த வேண்டும். இந்தியாவில் டெலிமெடிசின் சேவைகளை மேம்படுத்த இதுதான் தருணம். புறநோயாளிகள் பிரிவில் தேவையான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த ஒமைக்ரான் அலையில் ஒட்டுமொத்த அழுத்தமும் புறநோயாளிகள் பிரிவில் தான் இருக்கப் போகிறது. ஐசியுக்களில் அனுமதியாவோர் எண்ணிக்கையைவிட வீட்டில் மருத்துவ சேவை தேவைப்படுவோர் மிகமிகமிக அதிகமாக இருக்கப்போகிறது. நோயாளிகளை வீடுகளிலேயே வ்வைத்துப் பராமரித்தல் நல்லது. அது சாத்தியப்படாவிட்டால் தனிமைப்படுத்துதல் மையங்களை அமைக்கலாம். மேம்படுத்தப்பட்ட சிகிச்சை தேவைப்படுவோரை மற்றும் மாற்றலாம்.
அதேபோல், பொதுமக்களும் ஒமைக்ரான் வைரஸை சாதாரண சளியை ஏற்படுத்தும் காமன் கோல்ட் வைரஸ் போன்று நினைத்து அஜாக்கிரதையாக இருக்கும் அபாயமும் இருக்கிறது. ஒமைக்ரானின் தாக்கத்தை இப்போதைய சூழலில் மிதமானது, சாதாரண சளியைப் போன்றது என்றெல்லாம் புறந்தள்ள முடியாது.
தென் ஆப்பிரிக்கா, பிரிட்டனில் இருந்து வரும் தகவல் எல்லாம் ஒமைக்ரான் 4 மடங்கு அதிகம் பரவக் கூடியது என்பதையே உறுதியாக நிரூபித்துள்ளது. அதேவேளையில் மருத்துவமனையில் சேரும் அபாயம் 4ல் ஒரு மடங்காக இருக்கிறது. அதேபோல் மருத்துவமனையில் இணைநோய், தீவிர பாதிப்பு, மூச்சுத் திணறல் ஆகியன காரணங்களுடன் அனுமதியாவோரின் எண்ணிக்கை மற்ற திரிபுகளை ஒப்பிடும்போது ஒமைக்ரானில் மிகமிகக் குறைவாக இருக்கிறது.