பெசில் பிரதமரானாலும் அதனை செய்ய முடியாது - பழனி திகாம்பரம்
தற்போதைய உள்ள நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டாலும் நாட்டை பாதாள குழியில் இருந்து மீட்டெடுப்பது என்பது கடினமான விடயமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து கெண்டு செல்லுகிறது. எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள், பெற்றோல், டிசல் போன்றவற்றுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர்.
வாக்களித்த பெரும்பான்மை மக்கள் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
இந்த அரசாங்கம் மலையகத்திற்கும் மலையக மக்களுக்கும் எவ்வித அபிவிருத்திகளையும் செய்யவில்லை. கடந்த அரசாங்கத்தில் எங்களால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் மாத்திரம் உள்ளது. எம்மால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தினை தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் திறப்பு விழா செய்து வருகிறார்கள். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் என்பது ஒன்று தேவையில்லை. காலி, மாத்தறை போன்ற பகுதியில் உள்ள பெரும்பான்மை மக்கள் எவ்வாறு சிறுந்தோட்ட உரிமையாளர்களாக இருக்கின்றார்களோ அதேபோல் மலையகத்தில் உள்ளவர்களும் சிறுதோட்ட உரிமையாளர்களாக ஆக்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம் என்று கூறினார்.