ஒமைக்ரான் அதிகரிப்பு: கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துங்கள் - மத்திய அரசு உத்தரவு
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் ‘ஒமைக்ரான்’ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த வைரஸ், டெல்டா வைரசை விட 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்று நிபுணர்கள் கூறினர்.
ஒமைக்ரான் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்தை நிறுத்தின. இருப்பினும், இந்தியா உள்பட 116 நாடுகளில் ஒமைக்ரான் பரவி விட்டது.
இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600-ஐ நெருங்கி வருகிறது. இந்தியாவில் 19 மாநிலங்களில் ஒமைக்ரான் கால் பதித்து விட்டது. அதிக பாதிப்பு நிறைந்த தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை பிறப்பித்து வருகின்றன.
இந்த வாரம் புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மக்கள் பெருமளவு கூடுவது வழக்கம். இதனால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல மாநிலங்கள் தடை விதித்துள்ளன.
இந்தநிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில்,
அந்த கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகின்றன. அதன்படி, பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்க வேண்டும். கடைகளில் வாடிக்கையாளர்களிடையே சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கூடுமானவரை வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை பின்பற்ற வேண்டும்.
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தீவிரமாகவும், கண்டிப்பாகவும் அமல்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் இவற்றை அமல்படுத்துவது, மாவட்ட கலெக்டர்களின் பொறுப்பு. சமூக இடைவெளியை பின்பற்ற செய்வதற்காக, மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பிக்கலாம்.
கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படியும், இந்திய தண்டனை சட்டத்தின்படியும் உரிய நடவடிக்கை எடுக்கலாம்” என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.