வெளிநாட்டு அமைச்சு திடீர் தீர்மானம்
நைஜீரியாவின் அபுஜாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸின் நிக்கோசியாவில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகம் போன்ற வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்கள் / பணிமனைகளை 2021 டிசம்பர் 31ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடுவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு வௌிநாட்டு அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்ற இந்தத் தீர்மானமானது, வெளிநாட்டு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் வலையமைப்பின் மறுசீரமைப்புச் செயன்முறையின் ஒரு பகுதியாகும். உலகளாவிய தொற்றுநோயால் முன்வைக்கப்படும் கடுமையான பொருளாதார சவால்களின் பின்னணியில் இருதரப்பு உறவுகளை திறம்பட முன்னெடுப்பதனை உறுதி செய்யும் அதே வேளையில், நாட்டிற்குத் தேவையான வெளிநாட்டு இருப்புக்களைப் பாதுகாத்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்கள் / பணிமனைகளைப் பராமரித்தல் தொடர்பான செலவீனங்களைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.