ஆட்சியரின் சாதுரியத்தால் முடிவுக்கு வந்த போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு அருகில் இருக்கும் மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவு ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.
பல தொழிற்சாலைகள் தங்களுடைய ஊழியர்களை தங்கள் சொந்த விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்துள்ளது. ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் செயல்படும் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர்.
இவர்கள், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பூந்தமல்லியில் உள்ள பகுதியில் அமைந்துள்ள விடுதியில் தங்கி பணி செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், தென் மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த புதன்கிழமை விடுதியில் தயாரிக்கப்பட்ட உணவினால் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது. 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு உடல் நலக்குறைவால் அருகிலிருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் திரும்பவில்லை என்றும், அவர்கள் குறித்த நிலையை சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகம் தெரிவிக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் குறித்து நிர்வாகத்திடம் சக ஊழியர்கள் கேள்வி எழுப்பியபோது மழுப்பலான பதில்களை தெரிவித்துள்ளனர்.
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விடுதியில் இருந்த பெண் ஊழியர்கள் அனைவரும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உடல்நலம் பாதித்த பெண்களின் நிலை குறித்து பல்வேறு கேள்விகளை அவர்கள் எழுப்பினர். அவர்கள் உடல்நலம் தேறிவிட்டதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் போராட்டக்காரர்களிடம் அவர் தெரிவித்தார். ஆனால், அவரது பேச்சை யாரும் கேட்கவில்லை.
சாதுரியமாக யோசித்த ஆட்சியர், சிகிச்சை பெற்று வந்த பெண்களில் ஒருவருக்கு வீடியோ கால் செய்து, போராட்டக்காரர்களிடம் காட்டினார். அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் உடல்நிலை தொடர்பாக கேள்வி எழுப்பி, பதில் அளிக்க வைத்தார். இதனால், போராட்டக்காரர்கள் நிம்மதியடைந்தனர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.