
இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு பாராட்டு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா நேற்று (15) பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார்.
குறித்த சந்திப்பின் போது இலங்கையில் செயற்படுத்தப்படும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
“இலங்கையில் மிகச்சிறந்த தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் காணப்படுகிறது” என விக்னராஜா குறிப்பிட்டார்.
பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ள பல நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளதாக இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் சுற்றுலாத்துறை தற்போது மீண்டும் படிப்படியாக வளர்ச்சியடைய ஆரம்பித்திருப்பதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
கொவிட் தொற்று நிலைமை காரணமாக உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.