தங்கமணியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி கைப்பற்றப்பட்டது.
கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் பி.தங்கமணி. தற்போது குமாரபாளையம் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார். அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.85 கோடிக்கு சொத்து சேர்த்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி (60), அவரது மனைவி டி.சாந்தி (56), மகன் டி.தரணிதரன் (32) ஆகியோர் மீது நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து சென்னை, நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள தங்கமணி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். சென்னையில் எம்எல்ஏக்கள் விடுதியில் உள்ள தங்கமணியின் அறை, பனையூர் பண்ணை வீடு உட்பட 14 இடங்களில் சோதனை நடந்தது.
நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையம் அடுத்த கோவிந்தம்பாளைத்தில் உள்ள பி.தங்கமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது தங்கமணியும், அவரது மனைவியும் வீட்டில் இருந்தனர்.
தங்கமணியின் தனி உதவியாளர் சேகர், பள்ளிபாளையம் முன்னாள் நகராட்சித் தலைவர் வெள்ளியங்கிரி, தங்கமணியின் நண்பரும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவருமான டி.கே.எஸ்.சுப்பிரமணியம், தங்கமணியின் சம்பந்தி சிவசுப்பிரமணியம், அவரது தம்பி மூர்த்தி, தங்கமணியின் சகோதரி நாகரத்தினம், ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சி உரிமையாளரான தங்கமணியின் மருமகன் தினேஷ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.
சேலத்தில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரன் வீடு, அலுவலகம் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் குழந்தைவேலுவின் வீடு, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தங்கமணியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
நாமக்கல்-33, சென்னை-14, ஈரோடு-8, சேலம்-4, கோவை-2, கரூர்-2, கிருஷ்ணகிரி-1, வேலூர்-1, திருப்பூர்-1, கர்நாடக மாநிலம் பெங்களூரு-2, ஆந்திர மாநிலம் சித்தூர்-1 என மொத்தம் 69 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது
நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பதிவு செய்த வழக்கில் தங்கமணி, அவரது மகன் தரணிதரன் இருவரும் வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்துகளை தமிழகம் மற்றும் வெளியிடங்களில் உள்ள தங்களது உறவினர்கள், ஆதரவாளர்கள் பெயரில் வைத்துள்ளனர். மேலும், முறைகேடான வழியில் ஈட்டிய பெரிய தொகையை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.