
டிசம்பர் மாத இறுதி வரைக்கான சுகாதார வழிகாட்டி
கொவிட் தொற்றுக் காரணமாக நடைமுறைப்படுத்தியிருக்கும் சுகாதார வழிமுறைகள் மேலும் 15 தினங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அமுலில் உள்ள சுகாதார வழிமுறைகளில் மாற்றம் மேற்கொள்ளாது, டிசம்பர் மாத இறுதி வரை தொடர்வதற்கு தீர்மானித்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்று (15) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டி ஆலோசனைகளில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது நீடிக்க நாம் எதிர்ப்பார்த்துள்ளோம் புதிதாக வரையறைகளை மேற்கொள்ள நாம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
பொது மக்களிடம் இதுதொடர்பில் வேண்டுகோளோன்றை முன்வைக்கின்றோம். தற்போது 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்க தீர்மானித்துள்ளோம். இதனால் அருகில் உள்ள வைத்தியசாலை அல்லது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடத்தப்படும் தடுப்பூசி ஏற்றப்படும் மத்திய நிலையங்களில் தடுப்பூசியை கூடிய விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பூஸ்டர் தடுப்பூசியை விசேடமாக தொழிற்சாலை, அரச நிறுவகங்களில் பணியாற்றுவோருக்கு வழங்குவதற்கு நாம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளோம். இங்கே கடமையாற்றும் அனைவரும் தயவு செய்து தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு தாம் கேட்டுக்கொள்வதாக வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டார்.
நாம் எதிர்ப்பார்த்ததிலும் பார்க்க குறைந்த எண்ணிக்கையிலானவர்களே தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி ஏற்றப்பட்டதனாலேயே தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிந்தது. இது தடுப்பூசி ஏற்றப்பட்டதினால் கிடைத்த பலனாகும் என்று குறிப்பிட்டார்.