
பிபின்ராவத் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது.
விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் வெலிங்டனில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை முதல் அந்த ஆஸ்பத்திரிக்கு ராணுவ உயர் அதிகாரிகள் வந்தனர். மேலும் பாதுகாப்பிற்காக ராணுவ ஆஸ்பத்திரி முன்பு துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட இறந்த 13 பேரின் உடல்கள் பெட்டியில் வைக்கப்பட்டு, அதன் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட ராணுவ டிரக்குகளில் ஏற்றப்பட்டன. இதையடுத்து இந்த ராணுவ டிரக்குகள், ஆஸ்பத்திரியில் காலை 10.30 மணிக்கு புறப்பட்டு எம்.ஆர்.சி. ராணுவ முகாமிற்கு வந்தது.
வீரர்களின் உடல்களை சுமந்து வந்த ராணுவ டிரக்குகளுக்கு முன் ராணுவ இசைக்குழு இசைத்தபடி வந்தனர். தொடர்ந்து முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி ஆகியோரது உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக இறக்கப்பட்டது. தொடர்ந்து 3 டிரக்குகளில் இருந்தும் 13 பேரின் உடல்கள் இறக்கப்பட்டு, எம்.ஆர்.சி. முகாமில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது.
பாலம் விமானநிலையத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் பிபின்ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் டெல்லி காமராஜ் மார்க் பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்பின்னர் இறுதி ஊர்வலம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
டெல்லியில் உள்ள பிரார் சதுக்கத்தில் உள்ள சுடுகாட்டில் முழு ராணுவ மரியாதையுடன் பிபின்ராவத்தின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ராணுவத்தினர் செய்து வருகிறார்கள்.