
மூன்று நிமிட காணொளி சந்திப்பில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய நிறுவனம்
தம்முடைய நிறுவனத்தில் பணியாற்றிய 900 ஊழியர்களை ‘ஸூம்’ எனும் காணொளி சந்திப்பிற்கு அழைத்திருந்தார் பெட்டர்.காமின் தலைமை நிர்வாக அதிகாரி. ஆனால் அது வேலையைப் பற்றி பேசுவதற்காக அல்ல, வேலையைவிட்டு நீக்குவதற்காக என்பதை அறிந்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பெட்டர்.காம் நிறுவனத்தின் தலைவரான விஷால் கார்க் இந்தப் பணி நீக்கத்துக்கான காரணமாக சந்தை நிலவரம், செயல்திறன் ஆகியவற்றைக் காரணமாகக் கூறியுள்ளார்.
காணொளி சந்திப்பில் பேசிய அவர், “இந்தக் காணொளி சந்திப்பில் இடம்பெற்றுள்ள 900 பேரும் பணி நீக்கம் செய்யப்படுகிறீர்கள்,” என்றார்.
பெட்டர்.காமின் ஊழியர்களில் அந்த எண்ணிக்கை 9 விழுக்காடாகும்.
இந்திய அமெரிக்கரான விஷால் கார்க் இரக்கமின்றி வெளியிட்ட இந்த அறிவிப்பை ஊழியர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததையடுத்து, விஷால் கார்கை இணையவாசிகள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த பணி நீக்கம் குறித்து டெய்லி மெயில் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், “3 நிமிட சந்திப்பில் 900 பேரைப் பணி நீக்கம் செய்வது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். இதை நான் இரண்டாவது முறையாக செய்கிறேன்.
“ஊழியர்களில் சிலர் சோம்பேறியாக உள்ளனர். அவர்கள் செய்யும் பணி ஆக்கபூர்வமாக இல்லை. ஏறக்குறைய 250 ஊழியர்கள் வெறும் 2 மணி நேரம் மட்டுமே வேலை செய்வது தெரியவந்தது,” என்றார் அவர்.
இதற்கு முன்பும் ஒருமுறை ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தபோது விஷால் அனுப்பிய மின்னஞ்சலில், “நீங்கள் படுமந்தமாக இருக்கிறீர்கள். நீங்கள் என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்குறீர்கள். உங்கள் பணியை இத்தோடு முடித்துக்கொள்ளுங்கள்,” என்று குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.