குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தாயும் தற்கொலை
கரூர் மாவட்டம் பாலவிடுதி செம்பியாநத்தத்தை அடுத்து உள்ளது பூசாரிபட்டி. இந்த கிராமத்தில் வசிப்பவர் சக்திவேல். டெக்ஸ்டைல் தொழிலாளியான, இவருக்கும் தவளைவீரன் பட்டியை சார்ந்த சரண்யாவிற்கும், கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கனிஷ்கா (6 வயது) புவிஷா ( 3 வயது) மகளும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என சரண்யா கணவரிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவருக்கும், மனைவிக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு தனது இரு பெண் குழந்தைகளுடன் வெளியில் வந்த சரண்யா, கணவருக்கு சொந்தமான 50 அடி ஆழம் கொண்ட அவர்களுடைய கிணற்றில் குழந்தைகளை தண்ணீரில் வீசி விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மனைவியையும், குழந்தைகளையும் காணாத கணவர், அக்கம், பக்கம் தேடியும் கிடைக்காததால் கிணற்றை பார்த்த போது, அவர்கள் தண்ணீரில் மிதந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அவர்கள் 50 அடி ஆழ கிணற்றில் இறங்கி உடல்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் மனைவி, மகள்கள் கிணற்றிக் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால், வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா, அல்லது வேறு யாரேனும் கிணற்றில் தள்ளி கொலை செய்தார்களா என்பது குறித்து போலீசாரும், குளித்தலை கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.