மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டும் மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகள்
மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டும் மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான கடை தொகுதிகளுடன் கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
இவ் வருடம் நத்தார் புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு மன்னாரில் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் முன்னெடுக்க மன்னார் நகர சபையால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நகர சபை வருமானத்தை ஈட்டும் நடவடிக்கையாக இதனை முன்னெடுக்கவில்லை. மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கோடு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக மன்னார் நகர சபையினால் மன்னாரில் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
எனினும் குறித்த காலப்பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. நாங்கள் மக்களுக்கு பல வழிகளிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதும்,மக்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை.
பஜார் பகுதி உள்ளடங்கலாக மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஒவ்வொரு வர்த்தக நிலையங்களிலும் அதி கூடிய மக்களே கூடி நின்றமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் சந்தர்ப்பம் இருந்தது.
குறித்த விடயங்களை அவதானித்த நிலையில் இவ்வருடம் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கடைத் தொகுதிகளை வழங்குவதன் ஊடாக மக்களின் நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்த்துள்ளோம்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதற்காக மன்னார் நகர சபை குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியது. நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (3) காலை மன்னார் நகர சபையில் சுகாதார துறையினர்,பொலிஸார் மற்றும் மன்னார் நகர சபையின் தலைவர்,உப தலைவர், செயலாளர்,உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் இறுக்கமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.வியாபார நடவடிக்கைகளுக்கு வருகின்ற வெளிமாவட்ட வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் இரண்டும் பெற்றுக் கொண்டுள்ளதுடன் தடுப்பூசி அட்டை வைத்திருத்தல் வேண்டும்.குறித்த வியாபாரிகளுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.குறித்த தீர்மானங்களையும்,சுகாதார நடைமுறைகளையும் கடை பிடிக்காத வர்த்தகர்களுக்கு எதிராக உடனடியாக பொலிஸார் மற்றும் சுகாதார துறையினர் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்களின் அதிகமாக நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.என அவர் மேலும் தெரிவித்தார்