ஏ.டி.எம். கட்டணம் உயர்கிறது
வங்கி வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் உயருகிறது. இதன்படி ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும்.
வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது தங்கள் வங்கி ஏ.டி.எம்.களில் ஒரு மாதத்திற்கு 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். பிற வங்கி ஏ.டி.எம்.களில் என்றால் மாநகரங்களில் 3 முறை கட்டணமின்றி பயன்படுத்தலாம். ஊரகப் பகுதிகள் என்றால் 5 முறை கட்டணம் கிடையாது. அதன் பிறகு பணம் எடுத்தாலோ, இருப்பை பரிசோதித்தாலோ ஒரு பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி. உடன் ரூ.23.6 கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த கட்டணத்தை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்திக்கொள்ள வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி மாதாந்திர இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏ.டி.எம்.களை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் அடுத்தாண்டு முதல் ஜி.எஸ்.டி. உடன் சேர்த்து ரூ.25 ஆக வசூலிக்கப்படும்.
அதிக பரிமாற்றக் கட்டணத்தை வங்கிகளுக்கு ஈடுகட்டவும், செலவுகள் அதிகரித்திருப்பதாலும் பரிவர்த்தனைக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதித்ததாக ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.