
எரிந்த கல்யாண மண்டபம் – உணவை ருசித்த விருந்தாளிகள்
மஹாராஷ்டிரா தானேவில் உள்ள பிவாண்டியில் திருமண மண்டபம் தீப்பிடித்து எரிந்த போதும் விருந்தினர்கள் திருமணத்தின் போது பரிமாறப்பட்ட உணவுகளை ருசித்து சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மஹாராஷ்டிராவின் தானேவில் உள்ள பிவாண்டியில் திருமண மண்டபம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை, சிறிதும் கண்டு கொள்ளாத விருந்தினர்கள் திருமணத்தின் போது பரிமாறப்பட்ட சுவையான உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
திருமண மண்டபம் தீப்பிடித்து எரிந்த போதும் விருந்தினர்கள் எதையும் கண்டுகொள்ளாமல், அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்தாலும், சத்தத்தை பொருட்படுத்தாமல் சாப்பிட்டு கொண்டுள்ளனர். அவர்கள் நாற்காலிகளில் அமர்ந்து நெருப்பைப் பார்த்துவிட்டு, மீண்டும் தொடர்ந்து சாப்பிடுகின்றனர். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
அன்சாரி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பட்டாசு வெடித்ததால் உணவு தயாரித்து வைத்திருந்த மேஜைக்கு பின்புறம் உள்ள ஹாலில் தீ விபத்து ஏற்பட்டது. தானே முனிசிபல் கார்ப்பரேஷன் தகவலின்படி, இந்த தீ விபத்தில் ஆறு இரு சக்கர வாகனங்கள், சில நாற்காலிகள் மற்றும் அலங்காரங்கள் எரிந்து நாசமானது.