வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை புறநகர் பகுதிகள்
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்த நிலையில் நேற்று காலை முதல் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கன மழை விட்டு விட்டு பெய்து வந்தது.
நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகள் மட்டுமின்றி குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக ஆவடி பூந்தமல்லி சாலை சிடிஎச் சாலை போன்ற பிரதான சாலைகளில் மழைநீர் அதிகளவில் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளான ஸ்ரீராம் நகர் பருத்திப்பட்டு வசந்தம் நகர் பட்டாபிராம், கோபாலபுரம், சோழம்பேடு, கோவில்பதாகை போன்ற பல்வேறு பகுதிகளில் குடியிருப்பை மழைநீர் சுமார் 3 அடி அளவிற்கு சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
திருவள்ளூர் அருகே வீட்டுக்குள் மழை நீர் புகுந்ததால் திருவள்ளூர் ஆவடி நெடுஞ்சாலையில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ள போலிவாக்கம் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் திருவள்ளூர் - ஸ்ரீ பெருமந்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஆவடியில் மழைநீர் வெளியேற போதிய வழிவகை இல்லாத காரணத்தினால் கடந்த வட கிழக்கு பருவ மழை முதல் தற்போது வரை இப்பகுதி மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் அதிகாலை முதல் நீர் தேங்கி உள்ள பகுதிகளை ஆய்வு செய்த நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.