தண்ணீரில் மிதக்கும் 400 கிராமங்கள்
கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காட்டாற்று வெள்ளமும் ஆற்றில் கலந்து, கடந்த 49 ஆண்டுகள் இல்லாத வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
அந்த வகையில், கடலூர் தென்பெண்ணையாற்றில் நேற்று முன்தினம் காலை 1 லட்சம் கனஅடி தண்ணீர் சென்றது. பின்னர் மாலையில் வெள்ளம் அதிகரித்து வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் பெருக்கெடுத்து ஓடியது. எனவே ஆறு, அதன் பாதையில் இருந்து திசைமாறி கரையோர பகுதிக்குள் புகுந்தது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகள், விளைநிலங்கள் அனைத்தையும் பெருவெள்ளம் சூழ்ந்தது.
அதாவது கடலூர் மாவட்டத்தில் காவனூர் என்கிற இடத்தில் தான் தென்பெண்ணை ஆறு நுழைகிறது. அங்கிருந்து சுமார் 46 கி.மீ. தூரம் வரைக்கும் பயணித்து கடலூரில் தாழங்குடா கடலில் கலந்து வருகிறது. ஆறு பயணிக்கும் இந்த இடைப்பட்ட பகுதி முழுவதையும் தென்பெண்ணை ஆற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. இங்கு குடியிருப்புகள் மிதப்பதுடன், நெல், சவுக்கு, கரும்பு என்று வயல்கள் அனைத்தும் தண்ணீரால் சூழப்பட்டு இருக்கிறது.
கடலூர் பகுதியில் மட்டும் சுமாா் 100 கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் வசித்த சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 22 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தென்பெண்ணை ஆறு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் நுழைந்து திருக்கோவிலூர் வரைக்கும் சுமார் 40 கி.மீ. தூரம் பயணிக்கிறது. இந்த பயணத்தூரத்திலும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள், நிலங்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இதில் 4 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கி கிடக்கிறது.
இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் ஏனாதிமங்கலம் கிராமத்தில் இருந்து சொர்ணாவூர் வரைக்கும் 80 கி.மீ. தூரம் பயணிக்கும் தென்பெண்ணை ஆறால், 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.