வீடுகளில் முடங்கிய சென்னைவாசிகள்
கடந்த 4 நாட்களாக தொடர்ந்து வெளுத்து வாங்கும் மழையால் தாக்குப்பிடிக்க முடியாமல் சென்னை திணறுகிறது. மழை எப்போது ஓயும்? தண்ணீர் எப்போது வடியும்? என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நாளுக்கு நாள் மழை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று மாலையில் தொடங்கிய மழை இன்று காலை வரை தொடர்ந்து பெய்தது. இதனால் வெள்ளம் வடிவதற்கு பதிலாக கூடுதலாக தேங்கியது.
பெரும்பாலான பிரதான சாலைகளில் கூட மக்கள் செல்ல முடியவில்லை. 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியும், சில இடங்களில் ஆறுபோல் பெருக்கெடுத்தும் ஓடுவதால் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடிய வில்லை.
வேளச்சேரி ராம் நகரில் பல தெருக்களில் இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. வீடுகளில் தவித்தவர்களை ரப்பர் படகுகள் முலம் தீயணைப்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.
கீழ்க்கட்டளை ஏரி நிரம்பியதால் மெயின் ரோட்டில் வெள்ளம் சூழ்ந்தது. பரங்கிமலை- மேடவாக்கம் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்ட மழை நீர் கால்வாய்கள் வழியாக வெள்ளம் செல்லவில்லை. ஆயில்மில், குமரன் தியேட்டர் பகுதிகளில் ரோடுகளில்தான் ஆறுபோல் வெள்ளம் பெருக்கெடுத்தது.
கிண்டி, அம்பாள் நகர் பகுதியில் சிறிய தெருக்களில் தேங்கிய மழை நீரில் டூ வீலர்கள் மிதக்கின்றன. மேற்கு மாம்பலம், ரங்கராஜபுரம், ஆரியகவுடா ரோடு விரிவு, காமராஜர் சாலை பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவு வெள்ளம் தேங்கி நிற்கிறது. கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த 4 நாட்களாக தண்ணீர் தேங்கி கிடப்பதால் மக்களால் வெளியே வர இயலவில்லை. ரோடுகளில் வாகனங்கள் போக்குவரத்தும் அதிக அளவில் இல்லை. இதேபோல் பட்டறைவாக்கம், டி.டி.பி. காலனி, மதனங்குப்பம், அன்னை சத்யா நகர், வடக்கு ஜெகநாதன் நகர், கிண்டி அம்பாள் நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.
தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வடிந்த பிறகே மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் விளக்கு இல்லாமல் இருளில் தவிக்கிறார்கள்.