கட்டுக்கடங்காத கூட்டம் கொட்டும் மழையிலும் சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருக்கும் மக்கள்
இந்த செய்தியை ஆடியோ வடிவிலும் கேட்கலாம்.......
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆண்டுதோறும் தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது கொரோனா பயம் காரணமாக குறைந்த அளவிலேயே பொதுமக்கள் பஸ்களில் பயணம் செய்தனர்.
இப்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மீண்டும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குடும்பத்தோடு உற்சாகமாக பயணம் செய்கின்றனர்.
இதனால் இந்த ஆண்டு அதிகளவு மக்கள் பஸ்களை பயன்படுத்தி வருவதால் தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. அதன்படி அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் உள்ள 20 ஆயிரத்து 334 பஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் இதுவரை 3 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
நாளை தீபாவளி என்பதால் இன்று சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவார்கள் என்பதால் பஸ் நிலையங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து இன்று 2,100 பஸ்களுடன் 1,540 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று காலை முதல் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் தாம்பரம், பூந்தமல்லி பஸ் நிலையங்களிலும் அதிக அளவு கூட்டம் இருந்தது. அரசு பஸ்கள் மட்டுமின்றி தனியார் ஆம்னி பஸ்களிலும் ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.