தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து 3,640 பஸ்கள் இன்று இயக்கம்
தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் ஒவ்வொரு ஆண்டும் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டன. சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் இருந்து நேற்று முன்தினம் முதல் 10 ஆயிரத்து 240 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது.
வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பஸ்களுடன் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கூடுதலாக 388 சிறப்பு பஸ்களும், நேற்று 1,575 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக தீபாவளியன்று சொந்த ஊர்களில் இருப்பதற்கு ஏதுவாக இன்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், சென்னையில் இருந்து கூடுதலாக 3 ஆயிரத்து 506 சிறப்பு பஸ்களும், பிற இடங்களில் இருந்து 3 ஆயிரத்து 371 சிறப்பு பஸ்களும் புறப்பட இருக்கின்றன.
சென்னையை பொறுத்தவரையில் பயணிகள் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக கோயம்பேடு பஸ் நிலையத்தை தவிர, மாதவரம் பஸ்நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், பூந்தமல்லி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பஸ்கள் புறப்படுகின்றன.