
நுகர்வோரைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் கொள்கை
இலங்கையில் பின்தங்கிய பிரதேசங்களின் தொடர்பாடல் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்காகத் தொலைத்தொடர்பு மேம்பாட்டுக் கட்டணத்தைப் பயன்படுத்துவதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நோக்கமாக இருக்கின்றதென, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்தார்.
தொலைத்தொடர்பு என்பது, தேசிய பொருளாதாரத்தின் முக்கிய பங்காளியாக அமைந்திருப்பதால், இலாபத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்படாமல், தேசிய பொருளாதாரத்தை இலக்கு வைக்கும் வேலைத்திட்டமொன்றைச் செயற்படுத்துமாறு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனையின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
“கிராமத்துக்குத் தொடர்பாடல்” என்ற எண்ணக்கருவுக்கு அமைய, இன்று (14) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற வீடியோ தொழில்நுட்பத்துடனான ஊடகச் சந்திப்பின் போதே, பணிப்பாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“கிராமத்துக்குத் தொடர்பாடல்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இவ்வாண்டு இறுதிக்குள் 10 மாவட்டங்களுக்கான 100 ப்ரோட்பேண்ட் கவரேஜ் திட்டம் முழுமைப்படுத்தப்படும் என்றும் 2022 இறுதிக்குள், ஏனைய மாவட்டங்களும் உள்ளடங்களாக முழு நாட்டுக்குமான ப்ரோட்பேண்ட் கவரேஜ் வசதிகளை வழங்குவதற்கான திட்டமிடல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும், பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்தத் தொடர்பாடல் சேவை வழங்குநர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுக்க, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் “கிராமத்துக்குத் தொடர்பாடல்” வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் தொலைத்தொடர்புக் கோபுரங்களுக்கான 50 சதவீதச் செலவை, தொலைத்தொடர்புகள் அறக்கட்டளை ஏற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்தத் தொலைத்தொடர்புக் கோபுரங்கள், இதற்கு முன்னர் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டன என்றும் ஆனால் இம்முறை உள்நாட்டிலேயே அவை நிர்மாணிக்கப்படுவதால், புதிய பொருளாதாரத் துறையொன்றைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது என்றும், பணிப்பாளர் நாயகம் அவர்கள் சுட்டிக்காட்டினார்.