
ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை
ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை உள்ளக்கிய குவாட் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (10) நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இது தொடர்பான கடிதம் ஏற்கனவே இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய மூன்று நாட்டு தூதரகங்களிற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் தேசிய கட்சிகளிற்கும், அதன் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் அந்த கடிதம் பார்வைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அனுப்பப்பட்ட அந்த கடிதத்திலே 1987 ஆம் ஆண்டின் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாகிய, நடைமுறையிலுள்ள மாகாண சபைகள் முறைமையானது இலங்கையால் கடந்த 3 வருடங்களாகக் கைவிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கமானது தேர்தலை நடாத்துவதற்கு எவ்வித முயற்சியையும் எடுக்காமல், பதிலாக சபைகளுக்குக் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அகற்றுவதிலேயே ஈடுபட்டுள்ளது.
இந்திய-இலங்கை ஒப்பந்தமானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குரிய பிராந்தியத்தை தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாகத் தெளிவாக அங்கீகரித்துள்ளது என்றும் கூறினார்.