
ஆப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசி தொழிற்சாலை அமைக்க மாடர்னா நிறுவனம் திட்டம்
உலக அளவில் ஆப்பிரிக்காவில் மிகவும் குறைந்த அளவிலான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஐ.நா.வின் ‘கோவேக்ஸ்’ திட்டத்தின் கீழ் தடுப்பூசி ஏற்றுமதி குறைந்ததால், ஆப்பிரிக்க நாடுகளுக்கு போதுமான தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படவில்லை.
இதற்கிடையில் பைசர், பையோ என்டெக் ஆகிய நிறுவனங்கள், ஆப்பிரிக்காவில் தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆலைகளை அமைக்க கடந்து ஜூலை மாதம் ஒப்பந்தம் செய்தன. இதனை தொடர்ந்து மற்றொரு அமெரிக்க உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனமான மாடர்னா, ஆப்பிரிக்காவில் மருந்து தயாரிப்பு ஆலையை தொடங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது.
அதன்படி தற்போது மாடர்னா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 500 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் விரைவில் ஆப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஆலையை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மாடர்னா தொழிற்சாலையைப் போல அனைத்து திறன்களையும் கொண்டதாக, இந்த புதிய தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த புதிய தொழிற்சாலையில் ஆண்டுக்கு 50 கோடி டோஸ் தடுப்பூசிகளை தயாரிக்க இலக்கு வைத்துள்ளதாகவும் மாடர்னா நிறுவனம் கூறியுள்ளது. தற்போது தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும், அங்கு உள்ளூர் மக்கள் பெரும்பான்மையான அளவில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் மாடர்னா நிறுவனம் கூறியுள்ளது.