
தடுப்பு காவலில் உள்ள பிரியங்கா காந்தி மீது வழக்குப் பதிவு
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் லகிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.
மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா லகிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரை சேர்ந்தவர் ஆவார். இந்த கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பா.ஜ.க- வினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பா.ஜ.க.வினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால், அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை மேலும் பரவாமல் இருக்க லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் 15 பேர் மீது கொலை மற்றும் வன்முறையைத் தூண்டியதற்காக உத்தரப்பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
விவசாயிகள் மீது கார் மோதும் பதை பதைக்கும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, விபத்துக்கு காரணமான டிரைவர் ஏன் கைது செய்யப்படவில்லை என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு டுவிட்டர் பதிவில், தனது மொபைலில் விவசாயிகள் விபத்துக்குள்ளான வீடியோவை காட்டி, இந்த வீடியோவைப் பார்த்தீர்களா பிரதமரே.. உங்கள் அரசில் இடம்பெற்ற மத்திய மந்திரின் மகன் எவ்வாறு விவசாயிகளை வாகனத்தால் மோதுகிறார் எனப் பார்த்தீர்களா. இந்த வீடியோவை தயவுசெய்து பார்த்து, இந்த மந்திரியை ஏன் இதுவரை நீக்கவில்லை, அவரின் மகன் ஏன் கைது செய்யப்படவில்லை என்பதை விளக்குங்கள்.
இந்த தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தவர்கள் விவசாயிகள். அவர்களின் மகன்கள் இந்த தேசத்தின் எல்லையைக் காக்கும் பணியில் இருக்கிறார்கள். நீங்கள் என்னைப் போன்ற தலைவர்களை எந்தவிதமான முதல் தகவல் அறிக்கையின்றி கைது செய்துள்ளீர்கள். ஆனால், அந்த மந்திரியின் மகனை ஏன் சுதந்திரமாக அலையவிட்டீர்கள்?
லக்னோ வரும் பிரதமர் மோடி லக்கிம்பூருக்கு வரவேண்டும். தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த, தேசத்தின் ஆன்மாவான, நமக்கு அன்னத்தை வழங்கும் விவசாயிகள் வேதனையை, வலியைக் கேட்க வேண்டும். இது உங்கள் கடமை மோடிஜி.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மீது உத்தர பிரதேசம் ஹர்கான் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.