
போர்க்களமாக காட்சி அளித்த லகிம்பூர் நேரில் பார்த்தவர்கள் விளக்கம்
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டம், பன்பீர்பூர் கிராமத்தில் நுழையும் போது மயான அமைதி நிலவுகிறது. விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சாலை இந்திய-நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.
லகிம்பூர் கெரியிலிருந்து பன்பீர்பூர் வரை செல்லும் 80 கி.மீ தூர சாலையில், ஒவ்வொரு பத்து கி.மீ தொலைவிலும் விவசாயிகள் தடுப்புகள் அமைத்துள்ளனர். அவ்வழியே செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் தடுத்து நிறுத்தி விசாரித்த பின் உள்ளே நுழைய விடுகின்றனர்.
போலீஸ் தரப்பில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளின் எண்ணிக்கை வெறும் ஐந்து மட்டுமே. அவர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தி எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை.
விவசாயிகளின் மீது ஏற்றப்பட்ட கார் டயரின் தடங்கள் தெள்ளத்தெளிவாக கட்சியளிக்கின்றன. தப்பியோட முயன்ற விவசாயிகளின் அறுந்த காலணிகளும் அங்குள்ள சகதிகளில் தென்படுகின்றன.
சாலையில் ஆங்காங்கே விவசாயிகள் போராட்டம் நடத்த பயன்படுத்திய கொடிகள், போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் சிதறிக் கிடக்கின்றன. மத்திய இணை மந்திரி அஜய் மிஷ்ராவின் பாதுகாப்புக்கு உடன் வந்த வாகனங்களில் இரண்டு வாகனங்கள், அங்கு நடந்த கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்டன. சேதமடைந்த நிலையில் இருந்த அந்த வாகனங்களையும் காணமுடிகிறது.
சம்பவம் நடந்த இடத்தின் மிக் அருகே, சாலையை ஒட்டியவாறு ஒரு துணை மின்நிலையம் உட்பட நான்கு கட்டிடங்கள் இருந்தன. அந்த கட்டிடத்தில் குடியிருக்கும் விவசாயி சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார்.
விவசாயி அங்கு நடந்த துயர சம்பவத்தை பற்றி கூறுகையில், நான் சம்பவத்தன்று மாலை 3.30 மணியளவில் என் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்போது கூச்சல் மற்றும் அலறல் சத்தம் கேட்டது. இரண்டு கார்கள் அதி வேகமாக தறிகெட்டு ஓடியது.
அந்த கார் செல்லும் வழியில் இருந்த அனைவரது மீதும் ஈவு இரக்கமின்றி ஏறியது. அப்போது அந்த வழியே பேருந்துகள் ஏதும் வந்திருக்குமாயின், இன்னும் பலர் பலியாகி இருப்பார்கள்.
சம்பவம் நடந்த குழப்பத்தில், துப்பாக்கி குண்டுகள் வெடிக்கப்பட்டன. இரண்டு கார்களில் ஒரு காரிலிருந்து நான்கு பேர் வெளியே வந்தனர், அவர்கள் வெளியே வந்ததும் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
நான் வீட்டுக்குள் சென்று விட்டேன். ஆனாலும் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அரை மணி நேரம் கழித்து, பின் வாசலை திறந்து பார்த்த போது, ஒரு நபர் போலீசாரின் உதவியோடு தப்பி ஓடிக்கொண்டிருந்தார்.
அந்த நபர் விவசாயிகளின் மீது இரணடு முறை துப்பாக்கி சூடு நடத்தியவர் என கூறினார்.
வன்முறை அதிகரித்த போது, 5 போலீஸ்காரர்கள் செய்வதறியாது அவருடைய வீட்டில் பாதுகாப்புக்காக தங்கியுள்ளனர். அதில் இருவர் பெண் போலீஸ்காரர்கள் ஆவர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அவர்கள் பயந்து போய் இங்கு வந்து பாதுகாப்பாக இருந்துள்ளனர். அந்த விவசாயியையும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
சம்பவம் நடந்த சாலையின் அருகில் இருந்த துணை மின் நிலையத்தில் 10 பேர் இருந்துள்ளனர். அப்போது சம்பவத்தை நேரில் பார்த்த அங்கிருந்த மின்நிலைய அதிகாரி கூறுகையில், “நான் உட்பட என்னுடன் ஜூனியர் இன்ஜினியர் மற்றும் 8 பணியாளர்கள் உடனிருந்தனர்.
நாங்கள் பயத்தால் கதவை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தோம். யாரையும் வெளியே செல்ல வேண்டாம் என்று கூறினோம். துப்பாக்கி சூடு சத்தம் தொடர்ந்து சில மணி நேரம் கேட்டுக் கொண்டே இருந்தது என கூறினார். 9 பேரை பலி கொண்ட சம்பவம் நடந்த போது, யுத்தக் களமாக காட்சி அளித்திருக்கிறது அந்த பகுதி என்பதில் சந்தேகம் இல்லை.