
நாட்டை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க திட்டம் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
வடக்கு ,தெற்கு ,கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்திப் பணிப்பாளர் கெனிச்சி யோக்கோயமா (kenichi yokoyama) விடம் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
நெடுஞ்சாலை அமைச்சர் பெர்ணான்டோவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்தியப் பணிப்பாளர் கெனிச்சி யோக்கோயமா வுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நெடுஞ்சாலை அமைச்சில் நடைபெற்றது.
இலங்கையின் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம், வீதி பாதூகாப்பு, போக்குவரத்து நெரிசல் முகாமைத்துவ திட்டமொன்றை புதிதாக ஆரம்பித்தல் மேலும் புதிய வீதி அபிவிருத்தித் திட்டங்களைகளை ஆரம்பித்தல் என்பன தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கையின் நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்ட முன்னெடுப்பு தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்திப் பணிப்பாளர் இதன்போது வினவியதோடு இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, வடக்கு, தெற்கு கிழக்கு மற்றும் மேற்குப் பிரதேச வீதிகளை நெடுஞ்சாலை ஊடாக இணைப்பதன் மூலமாக நாட்டை அபிவிருத்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்ல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். அத்தோடு கிராமிய வீதி அபிவிருத்தி செயற்பாடுகள் வாயிலாக கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு உந்துசக்தி அளிக்க இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.