
பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கல்வியை போன்று அன்பும் அவசியம்
கொவிட் 19 தொற்று நிலமையினால் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பிள்ளைகளை மிகவும் உறுதியான மற்றும் வலுவான அணுகுமுறைகளுடன் மேம்படுத்தும் திசையினை நோக்கி கல்வியினை நகர்த்த வேண்டும் என கண்டி, தேசிய அடிப்படை கல்வி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அதுல சுமதிபால தெரிவித்தார்.
இந்நிலைமையினை உருவாக்குவது ஆசிரியர்கள், பெற்றோர்களைப் போன்று ஊடகங்கள் உட்பட முழு சமூகத்தினதும் பொறுப்பாகும் என அவர் தெரிவித்தார்.
´கொவிட் தொற்று, பிள்ளை பரம்பரை மற்றும் பிள்ளைகளின் கல்வி´ எனும் தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டே பேராசிரியர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். ஊடக கலந்துரையாடல் அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (1) இடம்பெற்றது.
பேராசிரியர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், கொவிட் 19 தொற்றுக் காலப்பகுதியில் பிள்ளைகளின் கல்வியினை போன்று அவர்களின் மனநிலை மட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட பின்னடைவினை எதிர்நோக்கும் அபாய நிலை உருவாகியுள்ளமையினால், அதனை வெற்றிக் கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
பிள்ளைகள் மீள பாடசாலைக்கு வருகை தந்தவுடன் மிகவும் அன்பாக அவர்களின் மனநிலையினை புரிந்துகொண்டு செயற்படுவதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்தல் வேண்டும்.
இந்த காலப்பகுதியில் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பில் மிகவும் பொறுமையாகவும், புரிதலுடனும் செயற்படல் வேண்டும். ஊடக நிறுவனங்களும் பிள்ளைகளின் மனநிலை மட்டத்தினை சிறந்த முறையில் பராமரிக்கும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அதன் நிகழ்ச்சிகளை பிரச்சாரம் செய்வது முக்கியமான விடயமாகும். இதற்காக கொவிட் 19 தொற்று நிலைமையினுள் கூட நாட்டினுள் ஏற்பட்டுள்ள நேர்முகமான சம்பவங்களை அறிக்கையிடுவது பொருத்தமானதாகும். வீட்டினுள் முடங்கி கிடக்கின்ற பிள்ளைகளுக்கு சந்தோஷம் மற்றும் உரிய புரிந்துணர்வினை பெற்றுக் கொடுக்கின்ற செய்திகளை பரிமாறுவது ஊடகங்களின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார்.