17 வயது சிறுமிக்கு காதல் வலை வீசிய 37 வயது நபர்
கல்லூரி மாணவியை திருமணம் செய்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பனியன் கம்பெனி ஊழியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவி இணையதளம் மூலமாக பாடம் படித்துவந்தார்.
இதற்காக மாணவிக்கு அவரது பெற்றோர் புதிய செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர். அந்த செல்போனில் பேஸ்புக் மூலமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த நாகராஜ் (37) என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
நாகராஜ் அதே பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் பேஸ்புக் மூலமாகவே நட்பாக பழகினர். நாளடைவில் இது காதலாக மாறியது. இவர்கள் இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
நாகராஜ் கல்லூரி மாணவியை பார்ப்பதற்காக கடந்த வாரம் கோவை வந்தார். பின்னர் மாணவிக்கு திருமண ஆசை காட்டி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று சாமி புகைப்படம் முன்பு நின்று கொண்டு இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் நாகராஜ் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நிலைமை எல்லை மீறிப் போகவே பயந்து போன மாணவி அங்கிருந்து தப்பி தனது வீட்டிற்கு வந்தார். பின்னர் நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் இது குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.