












அமீரகத்தில் கொரோனா பாதிப்பு- ஒரே நாளில் 2 ஆயிரத்தை கடந்தது
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் கடந்த 24 ஆம் தேதி குவாட் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அமெரிக்க அதிபரின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர், குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக அவரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாட்டு ஊடகத்தினரின் கேள்விகளுக்கும் அதிபர் ஜோ பைடன் பதிலளித்தார்.
இரு நாடுகளைச் சேர்ந்த ஊடகத்தினரையும் ஒப்பிட்டு பேசிய ஜோ பைடன், அமெரிக்க ஊடகத்தினரை விட இந்திய ஊடகத்தினர் சிறப்பாக நடந்து கொண்டனர் என்று குறிப்பிட்டார். ஜோ பைடனின் இந்த கருத்து அமெரிக்க ஊடகத்தினரிடையே பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. அமெரிக்க ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், ஜோ பைடனின் கருத்து வருத்தத்திற்குரியது என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் அமெரிக்க ஊடகத்தினரை வெள்ளை மாளிகை சமாதானப்படுத்தி உள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் சாகி செய்தியாளர்களிடம் கூறுகையில், “அமெரிக்க ஊடகத்தினரை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி அந்த கருத்தை கூறவில்லை” என குறிப்பிட்டார்.
அப்போது ஜென் சாகியிடன் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர், எல்லைகள் அற்ற ஊடகத்தினர் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி, ஊடக சுதந்திரத்தில் இந்திய ஊடகம் உலக அளவில் 142 வது இடத்தில் உள்ளது. அவ்வாறு இருக்கையில் இந்திய ஊடகத்தினருடன் ஒப்பிடும்போது அமெரிக்க ஊடகத்தினரைப் பற்றி ஜோ பைடன் எப்படி அவ்வாறு சொல்லலாம் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஜென் சாகி, ஜோ பைடன் கடந்த 9 மாதங்களில் சுமார் 140 முறைகளுக்கும் அதிகமாக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியுள்ளார். ஊடக சுதந்திரத்தையும், ஊடகத்தினரையும் அவர் பெரிதும் மதிக்கிறார் என்று என்னால் சொல்ல முடியும். கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க ஊடகத்தினர் எழுப்பிய சில கேள்விகள், அன்றைய நிகழ்வுக்கு பொருத்தமானதாக இல்லை என்று ஜோ பைடன் குறிப்பிட்டார். இதை தான் அவர் சொல்ல நினைத்தார் என்று கூறினார்.