தமிழக தயாரிப்புகள் என்ற நிலை உருவாக வேண்டும் – ஸ்டாலின்
இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் செப்டம்பர் 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ‘வர்த்தகம் மற்றும் வணிக வாரம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, மாநிலத்தின் ஏற்றுமதித்திறனை வெளிப்படுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு இன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ரூ.2120.54 கோடி மதிப்பீட்டில் 24 தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டன. 41,695 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும். சர்வதேச தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வர வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்நாடு ஏற்றுமதியில் மூன்றாவது பெரிய மாநிலமாக உள்ளது. மோட்டார் வாகனங்கள் ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. ஏற்றுமதி துறை பாதிக்க கூடாது என்பதால் தான் கொரோனா காலத்திலும் அனுமதி வழங்கினோம்.
தலைமை செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு அமைக்கப்படும். ஏற்றுமதி திறனை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழக தயாரிப்புகள் (Made in TamilNadu )என்ற நிலை உருவாக வேண்டும். மாவட்ட ஏற்றுமதி மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. பொது,தனியார் நிறுவனங்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று கூறினார்.