மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான் - ஊக்கம் கொடுத்த எடப்பாடி பழனிசாமி
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க குழு அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மருத்துவ நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு முடிவில் இருந்து மத்திய அரசு பின்வாங்கவில்லை.
தமிழகத்தில் இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இதற்கு முன்னதாக தேர்வு அச்சத்தினால் சேலத்தைச் சேர்ந்த தனுஷ் மற்றும் அரியலூரைச் சேர்ந்த மாணவி கனிமொழி என அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும், தற்கொலை முடிவு சரியானதல்ல என்று அரசியல் தலைவர்களும் மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் இன்று வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க குழு அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீட்டுக்கு மேலும் T.சௌந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அறிந்து, பெற்றோராக எனது மன வருத்தத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. ஆசிரியர், உளவியல் நிபுணர் மற்றும் கல்வியாளர் அடங்கிய குழுவை அமைத்து, மாணவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வழங்குங்கள் என்று திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
மாணவச் செல்வங்களே, விபரீதமான இத்தகைய முடிவினை இனி ஒருபோதும் எடுக்காதீர்கள். மாணாக்கர்களே, இனி இந்த அரசை நம்பாதீர்கள். 42-க்கும் மேற்பட்ட மருத்துவ இணை படிப்புகள் உள்ளன.
“மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு அவன் நேர்மையின் மறு பிறப்பு”
என்ற பாடல் வரிகளை இங்கு நினைவு கூறுகிறேன். மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.