புலவர் புலமைப்பித்தன் காலமானார்
அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இன்று காலை புலமைபித்தன் காலமானார். நீலாங்கரையில் உள்ள புலமைப்பித்தன் வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த புலமைபித்தனை, சசிகலா நேற்று நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார்.
புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். 1964இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.
1968 இல் எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் படத்தில் எழுதிய ஆயிரம் நிலவே பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதயக்கனி படத்திற்காக புலமைபித்தன் எழுதிய நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது.
புலமைப்பித்தன் 1935-ம் ஆண்டு பிறந்தார். தந்தை பெயர் கருப்பண்ணன். தாயார் பெயர் தெய்வானை அம்மாள். பள்ளி இறுதி வகுப்பில் படித்து முடித்த பிறகு, பஞ்சாலையில் தொழிலாளியாக சேர்ந்தார். வேலை பார்த்துக்கொண்டே பேரூர் தனித்தமிழ் கல்லூரியில் படித்து புலவர் பட்டம் பெற்றார்.
அதன் பிறகு 12 ஆண்டுகள் தமிழாசிரியராக நெல்லை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் வேலை செய்தார். பிறகு எம். ஜி. ஆர். உதவியால், சினிமா படங்களுக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே இவர் திராவிடர் கழகத்தில் ஈடுபாடு கொண்டு இருந்தார். பிறகு எம். ஜி. ஆர். அ. தி. மு. க. தொடங்கியபோது, ஆசிரியர் வேலையை விட்டு விலகி, அ. தி. மு. க. கட்சியில் சேர்ந்தார்.
இவர் சினிமாவுக்கு பாடல்கள் எழுதியது மட்டும் அல்லாமல், புரட்சித்தீ, பாவேந்தர் பிள்ளைத்தமிழ் ஆகிய கவிதை புத்தகங்களையும், எது கவிதை என்ற புத்தகத்தையும் எழுதி இருக்கிறார்.