
ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை - ராம்நாத் கோவிந்த்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நான்கு நாள் பயணமாக உத்தரபிரதேசத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜென்மாஸ்டமியை முன்னிட்டு இன்று அயோத்தி ராம் லல்லா கோவிலில் வழிபாடு நடத்தினார். இதன் மூலம் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்யும் முதல் ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அயோத்தி ராம் கதா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ராமாயண மேளாவை தொடங்கி வைத்தார். அதன் பின் அவர் பேசியதாவது,
ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை. ராமர் இருக்கும் இடத்தில் அயோத்தி உள்ளது. ராமர் இந்த நகரத்தில் நிரந்தரமாக வசிக்கிறார். எனது முன்னோர்கள் எனக்கு பெயர் வைத்த போது அவர்களுக்கு ராமர் மீது எவ்வளவு மரியாதை பாசம் என்பதை உணர்கிறேன். இது பொது மக்களிடையே காணப்படுகிறது.
அயோத்தியின் உண்மையான அர்த்தம், யாராலும் போர் செய்ய முடியாத இடம். ரகு வம்ச மன்னர்களான ரகு, திலீப், அஜ், தஷ்ரத் மற்றும் ராம் ஆகியோரின் தைரியம் மற்றும் சக்தி காரணமாக, அவர்களின் தலைநகரம் வெல்ல முடியாததாகக் கருதப்பட்டது. எனவே, இந்த நகரத்தின் பெயர் அயோத்தி எப்போதும் பொருத்தமானதாக இருக்கும் என்றார்.