
காபூல் குண்டுவெடிப்பில் பத்திரிகையாளர்கள், தடகள வீரர்கள் பலி
காபூல் விமான நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியே கடந்த சில நாட்களுக்கு முன் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 190 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 13 பேர் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் ஆவர். இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவோம் என கூறினார். அவர்களை பதிலுக்கு விலை கொடுக்க செய்வோம் என்றும் அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில், வருகிற 30ந்தேதி மாலை வரை அமெரிக்க கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்தது.
காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி இரண்டு பத்திரிகையாளர்கள் மற்றும் இரண்டு தடகள வீரர்கள் பலியாகி உள்ளனர். இதுபற்றி வெளியிடப்பட்ட செய்தியில், காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி ரஹா என்ற செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய அலி ரெஜா அகமதி என்ற நிருபரும், ஜஹான் இ சிஹாத் என்ற தொலைக்காட்சி சேனலின் முன்னாள் தொகுப்பாளர் நஜ்மா சாதிக் என்பவரும் உயிரிழந்து உள்ளனர்.
தேசிய அளவிலான தடகள வீரர்கள் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் தேக்வாண்டோ விளையாட்டு வீரர் முகமது ஜான் சுல்தானி மற்றும் வுசூ விளையாட்டு வீரர் இத்ரீஸ் என அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளில் அந்நாட்டில் நூறுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.