
விமானத்தில் பிரசவம் - ஆப்கன் அகதிக்கு குழந்தை பிறந்தது
ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் வந்துள்ளதால், அங்கிருந்த வெளிநாட்டு மக்களை மீட்கும் பணியில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன .அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் இருந்து இங்கிலாந்தும் தங்கள் நாட்டு மக்களை சிறப்பு விமானங்கள் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
துபாய் நகரத்தில் இருந்து, இங்கிலாந்தில் இருக்கும் பர்மிங்ஹாம் நகரத்துக்கு மக்களை மீட்டு வரும் விமானம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் அகதி பெண்ணான சொமன் நூரி (வயது 26) அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது என துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கூறியுள்ளது.
சொமன் நூரி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி துபாய் சென்றிருந்தார். அங்கிருந்து இங்கிலாந்து செல்லும் விமானத்தில் பயணித்ததாக விமான நிறுவனம் கூறியுள்ளது. விமானத்தில் பிறந்த அந்த பெண் குழந்தைக்கு ஹவா என பெயரிட்டுள்ளனர். தாய் சேய் இருவரும் நலமாக இருப்பதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.