
பாரா ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் பவினா - பிரதமர் மோடி வாழ்த்து
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது.
இந்தியா சார்பில் 54 பேர் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் தனிநபர் ('கிளாஸ் 4') போட்டியில் உலகின் 'நம்பர்-12' இடத்திலுள்ள இந்தியாவின் பவினாபென் 34, 'ஏ' பிரிவில் இடம் பெற்றார். நேற்று நடந்த காலிறுதியில் வெற்றி பெற்ற பவீனா அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
அரையிறுதியில், சீனாவின் மியோ ஷாங்கை எதிர்கொண்டார் பவினா, 34 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் , 7--11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பவினா தங்கம் வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. உலக சாம்பியன் யிங் ஜோவை எதிர்கொள்கிறார்.
பவினா வெற்றி பெற்று தங்கம் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பவினா பென்னுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது, பவினாவுக்கு வாழ்த்துகள். சிறந்த முறையில் விளையாடியுள்ளீர்கள். உங்களுடைய வெற்றிக்காக மொத்த நாடும் பிரார்த்தனை செய்து கொள்கிறது. நாளை, நாடு உங்களை கொண்டாடும்.
சிறந்த முறையில், எவ்வித நெருக்கடியும் இன்றி விளையாடுங்கள். உங்களுடைய திறமையான விளையாட்டு, ஒட்டு மொத்த நாட்டிற்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது என பதிவிட்டுள்ளார்.