
காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக இருந்த பயங்கரவாதி பலி
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து அந்நாட்டில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றன. சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானியர்களையும் பல நாடுகள் மீட்டு வருகின்றன.
மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஹரசன் பிரிவு பயங்கரவாதியால் நேற்று முன்தினம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 175 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தாக்குதல் நடத்தியவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என எச்சரிக்கைவிடுத்தார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியது. அந்நட்டின் நங்ஹகர் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். கோரசான் பிரிவு பயங்கரவாதிகளை குறிவைத்து ஆளில்லா டிரோன் விமானம் மூலம் அமெரிக்க படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தினர். இதில் முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவித்து உள்ளது.
அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கேப்டன் பில் அர்பன் கூறியதாவது, ஆளில்லா விமானத் தாக்குதல் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நடந்தது. இதில் காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கொல்லபட்டான் . நாங்கள் இலக்கை அழித்து உள்ளோம். பொதுமக்களுக்கு உயிர்சேதம் ஏதும் இல்லை என்று எங்களுக்குத் தெரியும் என கூறினார்.
யார் இந்த கோரசான் பயங்கரவாதிகள் என்றால் இஸ்லாமிக் ஸ்டேட் கோரசான் பிராவின்ஸ். இவர்கள் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் மட்டுமே நாசவேலைகளை நடத்திக்கொண்டிருக்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கிளையை சேர்ந்தவர்கள்.
பயங்கரவாதிகளின் சொர்க்கபுரி என்று ஆப்கானிஸ்தானைச் சொன்னால், அதில் மிக மிக மோசமான கொலைவெறி கும்பல் என்றால் அது இந்த ஐ.எஸ். கோரசான் அமைப்பினர்தான். ஐ.எஸ். கோரசான் பயங்கரவாதிகள், அப்பாவி மக்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் 100 தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.
2015 ஜனவரியில் உதயமானதுதான் இந்த அமைப்பு. அது முதல் திருநெல்வேலி அல்வாவை சுடச்சுட வாழை இலையில் வைத்து ரசித்து சாப்பிடுவதுபோல கொலைவெறி தாக்குதல்களை அரங்கேற்றி வரும் அநியாயக்காரர்கள் இந்த அமைப்பினர்.
தங்கள் அமைப்பு சரியில்லை, தங்கள் அமைப்பின் பயங்கரவாதம் போதாது என்று கருதுகிற தலீபான் அதிருப்தியாளர்கள் பலரும் ஐ.எஸ். கோரசானில் ஐக்கியமாகி விடுவார்கள். இதில் இருப்பவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தான்.
ஆப்கானிஸ்தானில் இவர்களது தலைமையகம் என்றால் அது நங்கர்ஹார் மாகாணம். ஆரம்பத்தில் இதில் 3 ஆயிரம் பேர் இருந்ததாகவும், அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் படைகளின் அதிரடியில் பெரும் வீழ்ச்சியை இந்த அமைப்பினர் சந்தித்ததாகவும் சொல்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 15-ந் தேதி தலீபான்கள் கைகளில் துப்பாக்கிகளுடன், ஆளும் அதிகாரமும் வந்து சேர்ந்தபோது காட்டு தர்பார் தொடங்கியது. அதன் ஒரு அங்கமாக சிறைகளில் அடைபட்டுக்கிடந்த ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா பயங்கரவாதிகளை திறந்து விட்டனர். அவர்கள் தலைமறைவாகி இருக்கிறார்கள். எங்கே, என்ன சதித்திட்டத்தை தீட்டிக்கொண்டிருக்கிறார்களோ.
ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால், இரு குழுவினரும் பயங்கரவாதிகள். ஆனாலும் இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டிருக்கிறார்கள்.
தலீபான்கள் புனிதப்போரை கைவிட்டு விட்டனர் என்பது ஐ.எஸ். அமைப்பினரின் குற்றச்சாட்டு. இதில் அதிருப்தி அடைந்துள்ள தலீபான்கள் பலரும் ஐ.எஸ். கோரசானில் கலந்து விட்டனர்.
எதிர்காலத்தில் அமைய உள்ள ஆப்கானிஸ்தான் அரசுக்கு சிம்ம சொப்பனமாகவும் தலைவலியாகவும் அமையப்போவது இந்த ஐ.எஸ்.கோரசான் பயங்கரவாதிகள்தான் என்றால் அதுதான் உண்மை.
ஐ.எஸ்.கோரசான்களை ஆப்கானிஸ்தானில் இயங்க அனுமதிக்க மாட்டோம். என்று சொன்னவர்கள் தலீபான்கள். இதைச்சொல்வதற்கு நீங்கள் யார் என்று கேட்பதுபோலத்தான் இப்போது காபூல் விமான நிலைய தாக்குதல்களை ஐ.எஸ். கோரசான்கள் நடத்திக்காட்டி உள்ளனர்.